பக்கங்கள்

Friday, February 25, 2011

+++ நெருக்கடியில் இருக்கிறதா சி.பி.ஐ.?

டந்த 2009, அக்டோபர் 21-ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக
சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் சென்ற பிறகே சோம்பல் முறித்து, நடவடிக்கையில் இறங்கியது!


டந்த 2009, அக்டோபர் 21-ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக
சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் சென்ற பிறகே சோம்பல் முறித்து, நடவடிக்கையில் இறங்கியது!

 அப்போது சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அஸ்வனி குமார், பதவியில் இருந்து விலகும் நேரத்தில், இந்த வழக்கு விவகாரம் முழுவதையும் பிரதமருக்குத் தெரிவித்துவிட்டு, 'அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும்’ என்பதையும் தெளிவாகக் கூறிவிட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு சி.பி.ஐ. இயக்குநராக வந்தவர், அமர்பிரதாப் சிங். இவர் வந்த பிறகுதான் வழக்கு வேகமெடுத்தது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் செயலாளர் சித்தார்த் பரூவா, தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோர் கைதாகினர்.
2ஜி அலைக்கற்றையில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது பற்றி, மத்திய தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்கிறது. சி.பி.ஐ. 20 ஆயிரம் கோடி என்கிறது. புதிதாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்​பேற்ற கபில் சிபலோ 'இழப்பே இல்லை’ என்கிறார்! இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அலசி ஆராய்ந்துவரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு, '2ஜி மற்றும் 3ஜி விவகாரத்தில் தற்போதைய நிலை பற்றி நேரில் வந்து தெரிவிக்கும்படி’ சி.பி.ஐ. இயக்குநர் அமர் பிரதாப் சிங்குக்கு அழைப்பு விடுக்க... கடந்த 15-ம் தேதி மாலை 3 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் தளத்தில் நடந்த கூட்டத்துக்கு அமர்பிரதாப் சிங் ஆஜரானார். நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக பி.ஜே.பி. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளார். இந்தக் குழுவில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தமிழகத்தைச் சேர்ந்த தம்பிதுரை, திருவண்ணாமலை வேணுகோபால், ராஜ்யசபா எம்.பி-க்கள் திருச்சி சிவா, பாலகங்கா உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள்!
இந்தக் குழு முன்னிலையில் ஆஜரான சி.பி.ஐ. இயக்குநர் சில விஷயங்களை விரிவாகவே சொன்னாராம். ''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 67 ஆயிரம் கோடி முதல் 1.76 லட்சம் கோடி வரை இழப்பு இருக்கலாம் என்று மத்திய தணிக்கை குழு கூறுகிறது. ஆனால் சி.பி.ஐ-யும், அமலாக்கப் பிரிவு இயக்குநரகமும் இணைந்து மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வில் 22 ஆயிரம் கோடி அளவு இழப்பு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீட்டின் அளவு 40 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கலாம். எவ்வளவு இழப்பு என்கிற விஷயத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்துகிறது. சிக்கலான தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் என்பதால், இந்த நேரத்தில் எவ்வளவு இழப்பு என்று மிகச்சரியாகக் கூறமுடியவில்லை. மேலும் சி.பி.ஐ., 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மோசடி தொடர்பான கிரிமினல் சதிகளைப் பற்றி மட்டுமே விசாரித்து வருகிறது...'' என்று சொன்னாராம்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இழப்பே இல்லை என்று கூறியது பற்றி பொதுக் கணக்குக் குழுவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு ஏ.பி.சிங், ''இழப்பே இல்லை என்று கூறுவது தவறு! 2ஜி முறை​கேட்டால் அரசு கஜானாவுக்கு பணம் வராமல் போய்விட்டதுதான் உண்மை!'' என்றும் உறுதியாகக் கூறி இருக்கிறார்.
அப்போது குறுக்கிட்ட ஐக்கிய ஜனதாதள எம்.பி-யும், கணக்குக் குழு உறுப்பினருமான என்.கே.சிங் மற்றும் உறுப்பினர்கள், ''இழப்பே இல்லை என்பதில் சி.பி.ஐ-க்கு மாற்று கருத்து உள்ளது. பின்னர் ஏன் முன்னரே நடவடிக்கை எடுக்கவில்லை?'' என்று கேட்டுள்ளனர். அதற்கு சி.பி.ஐ. இயக்குநர், ''மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய புலன்விசாரணையை முடிக்கும் வரை காத்திருந்தோம்...'' என்று கூறி இருக்கிறார். ஆனால், இந்த பதிலால் கணக்குக் குழுவினர் திருப்தி அடையவில்லையாம்.
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்​வந்த் சின்ஹா, ''2010 செப்டம்​பரில் கோர்ட் தலையிடும் வரை பெயர் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து வைத்திருந்தது ஏன்? இந்த வழக்கில் சந்தேகத்துக்கு உரியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று சி.பி.ஐ-க்கு ஏதேனும் நெருக்கடிகள் வருகிறதா?'' என்று கேட்டுள்ளார். ''அப்படி எதுவும் இல்லை!'' என்று சி.பி.ஐ. இயக்குநர் மறுத்து, ''ஆ.ராசா, உயர் அதிகாரிகள் மற்றும் பால்வா ஆகியோர் இதுவரை கைதாகி இருக்கிறார்கள். மேலும், குறைந்த விலைக்கு அலைக்கற்றை வழங்கப்பட்டது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே, விசாரணை முடிக்க சிறிது காலம் தேவைப்படுகிறது...'' என்றும் கூறியுள்ளார்.
இது தவிர மற்ற உறுப்பினர்களிடம் இருந்து சரமாரியான கேள்விகள் வந்துள்ளன. அதற்கு அவர், ''இந்தப் பொறுப்புக்கு நான் புதியவன். இங்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகிறது!'' என்று கூறியிருக்கிறார். இதனால் கூட்டத்தை அத்துடன் நிறுத்திவிட்டு, 'மேலும் தகவல்களுடன் மீண்டும் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பு விசாரணைக்கு வரும்படி’ ஜோஷி கூறியதாகச் செய்திகள் கசிகின்றன.
தற்போதைய சி.பி.ஐ. இயக்குநரான அமர்பிரதாப் சிங், 1974 பேட்ஜை சேர்ந்த ஜார்க்கண்ட் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் இதற்கு முன் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராகவும், எல்லைப் பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இந்தியன் போலீஸ் மெடல், குடியரசுத் தலைவரின் போலீஸ் மெடல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவரே எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், மீண்டும் வருவதாகக் கூறிச்சென்றது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது!
- பா.பிரவீன்குமார்

பிரதமர் சொன்னது சரிதானா?
''கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்​கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் என் கையில் இல்லை...'' - மடை திறந்தது போல் மனசை கொட்டியிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
சோ: ''கூட்டணி அரசில் லஞ்சம், ஊழல் இருக்கிறது. அதை பிரதமரால் கட்டுப்​படுத்த முடியாது என்பது போல ஒரு தத்துவத்தை உதிர்த்திருக்கிறார். மத்திய அரசுக்கு இதைவிட கேவலம் இருக்க முடியாது. பீகாரில்கூட நிதிஷ் தலைமையில் கூட்டணி அரசுதான் நடக்கிறது... அங்கே என்ன ஊழலா நடக்கிறது?''
தமிழருவி மணியன்: ''இப்படி​​யரு மோசமான வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. நேர்மையைத் தானாக இழந்து பதவியை தக்கவைத்துக் கொள்ள வாக்குமூலம் கொடுத்​திருக்கிறார் பிரதமர். பதவியைக் காப்பாற்றிக் கொள்​ளவும், ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காகவும் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கொள்ளைப் போ​னா​லும் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லுவது எந்த வகை நியாயம்? 
கோபண்ணா (காங்கிரஸ்): ''கூட்டணிக் கட்சிகளில் இருந்து யார் அமைச்சர் ஆக வேண்டும் என்பதை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்தான் முடிவு செய்ய முடியும். தி.மு.க-வில் அமைச்​சர்களாக யார் இருக்க முடியும் என்பதை கலைஞர்தான் தீர்மானிக்க முடியும், பிரதமர் அல்ல. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது கூட்டணியில் இருந்த ஜெயலலிதா சிபாரிசு செய்தவர்கள்தான் அமைச்சர்கள் ஆனார்கள். புதுசாக எதுவும் நடந்துவிடவில்லை. கடந்தகால நடைமுறைகள்தான் இப்போதும் கடைபிடிக்கப்​பட்டிருக்கிறது.''
- எம்.பரக்கத் அலி

No comments:

Post a Comment